தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வரும் பிப்ரவரி 21 முதல் 25-ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக பிப்ரவரி 21-ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களிலும், 22-ம் தேதி மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், நாளை மற்றும் நாளை மறுதினம் மீனவர்கள் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வட தமிழகத்தில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
