தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த ஒரு கோர விபத்து, பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைப்பதோடு பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களுக்கு இடையே, 19 வயது இளைஞர் ஒருவர் தனது பைக்கில் நுழைய முயன்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளது. முன்னால் இருந்த ஆட்டோ டிரைவர் பின்னால் கவனித்துப் பார்க்காமல் திடீரென வண்டியை எடுத்தபோது, இளைஞரின் பைக் ஹேண்டில் பார் ஆட்டோவில் உரசியுள்ளது. இதனால் நிலைதடுமாறி அவர் சாலையில் விழ, அதே நொடியில் பின்னால் வந்த பிரம்மாண்ட டம்பர் லாரி அவர் மீது ஏறியது.

​இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சாலை விதிகளை மதிக்காதவர்கள் மீது நெட்டிசன்கள் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சாலையில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவது, கண்ணாடிகளைப் பார்க்காமல் வண்டியை எடுப்பது போன்ற அலட்சியங்கள் எப்படி ஒரு பிஞ்சு உயிரைப் பறிக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. அதே சமயம், விபத்தின் போது அந்த இளைஞர் ஹெல்மெட் அணியாமல் இருந்ததும், குறுகலான இடைவெளியில் முந்திச் செல்ல முயன்றதும் விபத்தின் தீவிரத்தை அதிகமாக்கிவிட்டதாகச் சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.