ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோத்தல் கிராமத்தைச் சேர்ந்த சர்வன் குமார் என்ற நபர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி தன் மனைவி அஞ்சு தேவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சர்வன் குமார், அறிவாளால் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காலையில் இவர்களது உறவினர் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றபோதுதான் இந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சர்வன் குமார் கடந்த சில காலமாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்; சம்பவத்தின் போது அவர்களது 16 வயது மகன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்ததால் உயிர் தப்பினார். தற்போது போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

குடும்பப் பிரச்சனை மற்றும் போதைப் பழக்கத்தால் ஒரு குடும்பமே சிதைந்து போனது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.