2024, ஆகஸ்ட் 10 – காஸா நகரத்தின் அல்-தாபின் பள்ளி ஒரு சுடுகாடாக மாறிய அந்த நாளை யாராலும் மறக்க முடியாது. அந்த இடிபாடுகளுக்குள் தனது மகன் சாத்-ஐத் தேடி அலைந்த யாஸ்மின் மஹானியின் கதை, போரின் கொடூரத்திற்கு ஒரு சாட்சி. பள்ளி முழுவதும் பிணக்குவியல், ரத்த ஆறு. ஆனால், தன் மகனின் உடலையோ அல்லது ஒரு சதைத்துண்டையோ கூட அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. “அடக்கம் செய்ய என் மகனின் உடல் உறுப்பு கூட கிடைக்கவில்லை, அவன் இறந்துவிட்டான் என்பதை நான் எப்படி நம்புவேன்?” என்று கதறுகிறார் யாஸ்மின்.

​காஸா சிவில் டிஃபென்ஸ் குழுவின் அதிரடிப் புலனாய்வு அறிக்கையில் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளியாகியுள்ளது. 2023 அக்டோபர் முதல் இதுவரை 2,842 பேர் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டாலும், அவர்களின் உடல், எலும்பு, ஏன் ஒரு சொட்டு ரத்தம் கூடக் கிடைக்கவில்லை. அவர்கள் அப்படியே “ஆவியாக” மறைந்துவிட்டனர். இதற்குக் காரணம் இஸ்ரேல் பயன்படுத்திய சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ‘வேக்யூம் பாம்’ (Vacuum Bombs) மற்றும் ‘தெர்மோபாரிக்’ (Thermobaric) ஆயுதங்கள் தான் என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

​இந்த குண்டுகள் வெடிக்கும்போது சுமார் 3,500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்குகிறது. இந்த அதிகப்படியான வெப்பம் மனித உடலை சில நொடிகளில் சாம்பலாகவும் புகையாகவும் மாற்றிவிடும். சுவர்களில் தெறிக்கும் ரத்தக் கறைகள் மட்டுமே ஒரு உயிர் அங்கு இருந்ததற்கான கடைசி ஆதாரமாக மிஞ்சுகிறது. எம்.கே-84 ‘ஹம்மர்’, பி.எல்.யு-109 ‘பங்கர் பஸ்டர்’ போன்ற குண்டுகள் மனிதர்களின் நுரையீரலை வெடிக்கச் செய்து, சதைகளைச் சாம்பலாக்குகின்றன. காஸாவில் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், இன்னும் 3,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் இடிபாடுகளுக்குள் இன்றும் தேடி வருகின்றனர்.