இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டாலும், அங்குள்ள மக்கள் எப்படியாவது அவற்றைப் பார்த்துவிடுகிறார்கள் என்பதற்குச் சான்றாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டு வ்லாகர் கார்ல் ராக் என்பவர் பாகிஸ்தானுக்குச் சுற்றுலா சென்றபோது, அங்கிருந்த ஒரு சிறிய கேசட் கடையில் சமீபத்திய ஹிட் படமான ‘துரந்தர்’ (Dhurandhar) விற்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

​அந்தப் படத்தின் விலை என்னவென்று கடைக்காரரிடம் கேட்டபோது, அவர் “50 பாகிஸ்தான் ரூபாய்” (இந்திய மதிப்பில் சுமார் 16 ரூபாய்) என்று பதிலளித்தார். இதைக் கேட்டு வியந்த வ்லாகர், படத்தின் கதாநாயகன் ரன்வீர் சிங்கின் தாத்தா, பாட்டி இதே கராச்சி நகரைச் சேர்ந்தவர்கள் தான் என்பதையும் சுட்டிக்காட்டினார். ரன்வீர் சிங்கின் உண்மையான பெயர் ‘ரன்வீர் சிங் பவ்னானி’ என்பதும், பிரிவினைக்கு பிறகு அவர்கள் குடும்பம் மும்பை வந்ததும் குறிப்பிடத்தக்கது.

​பாகிஸ்தானின் பயங்கரவாதம் மற்றும் கராச்சியில் நடக்கும் கேங் வார் போன்ற உண்மைகளைத் தோலுரித்துக் காட்டியதால்தான், ‘துரந்தர்’ படத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. ஆனால், அந்தத் தடையைப் புறக்கணித்து மக்கள் மிகக் குறைந்த விலைக்கு கேசட்டுகளை வாங்கிப் பார்த்து வருகிறார்கள். “கலைக்கு எல்லைகள் கிடையாது” என்பதற்கு இந்தப் படமே ஒரு உதாரணம். தற்போது இந்தப் படம் நெட்ஃபிக்ஸ் தளத்திலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.