ரஷியாவில் தனது சேவையை முழுமையாகத் தடுக்க அந்நாட்டு அரசு முயற்சிப்பதாக மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மேக்ஸ்’ என்ற செயலியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக, சுமார் 10 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் சேவையை முடக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷியாவின் சட்டங்களுக்குப் பணிய மறுப்பதால் அங்கு கடும் கட்டுப்பாடுகளும் அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன.
வாட்ஸ்அப்மட்டுமின்றி டெலிகிராம் மற்றும் ஆப்பிளின் ஃபேஸ்டைம் போன்ற சேவைகளும் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளைச் சந்தித்துள்ளன.
ரஷியாவின் இந்த நடவடிக்கைக்குப் பின்னணியில் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதக் காரணங்கள் கூறப்பட்டாலும், தனது சொந்த அரசு செயலியை வளர்ப்பதே முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், பயனர் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள மறுக்கும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்குத் தொடர்ந்து தடையின்றி சேவை வழங்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது.
ரஷிய அரசு விதிக்கும் கடுமையான சட்டங்களுக்கு மெட்டா நிறுவனம் அடிபணியுமா அல்லது தொடர்ந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்யுமா என்பதைப் பொறுத்தே அந்நாட்டில் வாட்ஸ்அப்பின் எதிர்காலம் அமையும்.
