கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரைச் சேர்ந்த பண்டிதா சௌகான் என்பவரது மகள் நிஷா, மாற்று மதத்தைச் சேர்ந்த முகமது சலீம் சுதார் என்ற வாலிபரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். இவர்களது காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய நிஷா தனது காதலனைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
மகளைக் காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நிஷா தனது கணவருடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். தாங்கள் இருவரும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இருதரப்புப் பெற்றோரை வரவழைத்துப் போலீசார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனது ஒரே மகளைத் தங்களுடன் வரும்படி பெற்றோர் கண்ணீர் மல்கக் கெஞ்சிய நிலையில், நிஷா அதனை ஏற்க மறுத்துத் தனது கணவருடன் செல்வதிலேயே உறுதியாக இருந்தார்.
மகளின் இந்த முடிவால் மனமுடைந்த பெற்றோர், காவல் நிலையத்தின் முன்பாகவே விழுந்து புரண்டு கதறி அழுது நடத்திய பாசப் போராட்டம் அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் பெற்றோரின் கண்ணீரைக் கண்டு சலனமடையாத நிஷா தனது கணவருடன் புறப்பட்டுச் சென்றார்.
தங்களை தவிக்க விட்டுச் சென்ற மகளை நினைத்து அந்தத் தம்பதியினர் இரவு முழுவதும் காவல் நிலையத்தின் முன் காத்திருந்தது காண்போரை நெகிழச் செய்தது.
