தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காதது காங்கிரஸ் கட்சியினரிடையே ஒருவித எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸில் ஒரு தரப்பினர் திமுக கூட்டணியை ஆதரித்தாலும், மற்றொரு தரப்பினர் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகப் பேச்சுகள் எழுகின்றன.

இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்துத் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் தாமதம் காட்டக்கூடாது என்பதே தங்கள் விருப்பம் என்று தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் கடைசி நேரத்தில் தொகுதிப் பங்கீடு செய்ததால் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பாடமாகக்கொண்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடனடியாகப் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

தொகுதிப் பங்கீடு முடிவானால் மட்டுமே தேசியத் தலைவர்களைத் தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் தரப்பில் இருந்து இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இது குறித்துப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பாதுகாப்பான முறையில் குழு அமைப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு விவகாரம் சூடுபிடித்துள்ளதால், தமிழக அரசியல் களம் இப்போதே பரபரப்பாகக் காணப்படுகிறது.