சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் இரண்டாம் கட்டமாக ஆலோசனையில் ஈடுபட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று சசிகலா புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்ட அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்களிடம், அவர்களது பின்னணி மற்றும் வகித்த பதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய படிவங்கள் சேகரிக்கப்பட்டன. இன்றும் நாளையும் எனத் தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பேசிய முன்னாள் கொறடா நரசிம்மன், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆதரவாளர்களின் கருத்துகளைச் சசிகலா கேட்டறிந்ததாகத் தெரிவித்தார். சசிகலா வரும் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்றும், வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புதிய கட்சி தொடங்குவது குறித்த இறுதி முடிவைச் சசிகலாவே அறிவிப்பார் என்றும், அவர் எடுக்கும் முடிவிற்குத் தாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
