சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக அலுவலகத்தை உடனடியாக காலி செய்யுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இந்தக் கட்டிடத்தில் தான், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ நிறுவனமும் தவெகவின் தேர்தல் பணிகளும் செயல்பட்டு வந்தன. தற்போது அங்கிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுக்கப்படுவதால், கட்சி நிர்வாகிகள் புதிய இடத்தைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் வரை அங்கேயே செயல்பட அனுமதி கோரியும், அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் திடீர் வெளியேற்றத்திற்குப் பின்னால் திமுக இருப்பதாக தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அரசியல் ரீதியாகக் கொடுக்கப்படும் இந்த நெருக்கடியால் கட்சியின் தேர்தல் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விஜய் தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.