மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடந்த நேபாளம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி, ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்துள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை மிரள வைத்த நேபாளம், வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது. இதனால் ஒட்டுமொத்த நேபாள ரசிகர்களும் சோகத்தில் இருந்த வேளையில், ஒரு நேபாள ரசிகர் செய்த செயல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. போட்டி முடிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெளியேறிய பிறகு, அந்த ரசிகர் மட்டும் அங்கேயே தங்கி, கேலரியில் மற்றவர்கள் போட்டுச் சென்ற குப்பைகளைத் தானே முன்வந்து சுத்தம் செய்துள்ளார்.

​மைதானப் பணியாளர்களின் சுமையைக் குறைக்க அவர் செய்த இந்தச் சின்னஞ்சிறிய விஷயம், இப்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதை வீடியோ எடுத்த மற்ற ரசிகர்கள் இணையத்தில் பகிர, “நிஜமான கிரிக்கெட் ரசிகன் இவன்தான்” எனப் பாராட்டுக்கள் குவிகிறது. 2022 கால்பந்து உலகக்கோப்பையின் போது ஜப்பானிய ரசிகர்கள் மைதானத்தைச் சுத்தம் செய்து உலகையே வியக்க வைத்தது போல, இப்போது இந்த நேபாள ரசிகரும் தனி ஒருவனாக நின்று ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளார். தோல்வியின் வலியிலும் தனது சமூகப் பொறுப்பை மறக்காத அந்த ரசிகரின் செயல், ஸ்கோர்போர்டில் பதிவான ரன்களை விடப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது!