சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் குளிரூட்டப்பட்ட குடிநீர் கேட்டு தனது 3 வயது மகளின் தண்ணீர் புட்டியை தந்தை கொடுத்துள்ளார். ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர் கவனக்குறைவாக அந்தப் புட்டியில் கொதிக்கும் சுடுநீரை நிரப்பித் தந்துள்ளார். தண்ணீரை ஊழியர் கொடுக்கும்போது அதன் வெப்பம் குறித்து எவ்வித எச்சரிக்கையும் செய்யாத நிலையில் தந்தை தனது மகளிடம் அந்தப் புட்டியைக் கொடுத்துள்ளார்.

அதிலிருந்த தண்ணீரை அருந்திய சிறுமிக்கு நாக்கில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிறுமியின் தந்தை ஊழியரின் அஜாக்கிரதையே இதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

தனது தவறுக்கும் வருத்தம் தெரிவித்த அவர் மற்ற பெற்றோர்களும் உணவகங்களும் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவத்திற்கு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளதுடன் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.