அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் மனிதர்கள் வசிக்கும் வகையில் ஒரு நகரம் உருவாக்கப்படும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றங்களை அமைப்பதே தனது நீண்டகால இலக்கு என்றாலும், அதற்கு முன்னதாக நிலவில் நகரம் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் எளிதானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை அடைய சுமார் 6 மாதங்கள் தேவைப்படும் நிலையில், நிலவை வெறும் 2 நாட்களில் சென்றடைய முடியும் என்பதால், அங்கு அடிக்கடி விண்கலங்களை அனுப்பி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது சாத்தியம் என்று அவர் விளக்கியுள்ளார். இந்தத் திட்டம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மஸ்க், செவ்வாயில் நகரம் அமைக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாகலாம்,
ஆனால் நிலவில் அதனை 10 ஆண்டுகளுக்குள்ளேயே சாதிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். பூமிக்கு மிக அருகில் நிலவு இருப்பதால், போக்குவரத்து செலவு மற்றும் தொழில்நுட்ப சவால்கள் பெருமளவு குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விண்வெளியில் மனித நாகரிகத்தை விரிவுபடுத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பயணத்தில், நிலவில் அமையவுள்ள இந்த நகரம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
