இத்தாலியின் தென்பகுதியில் உள்ள புக்லியா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில், ஹாலிவுட் பட பாணியில் ஒரு துணிகரமான கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. சுமார் 10 பேர் கொண்ட முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கும்பல், போலீஸ் வாகனங்களைப் போன்ற நீல நிற விளக்குகள் பொருத்திய கார்களில் வந்து, பணத்தைக் கொண்டு சென்ற பாதுகாப்பு வாகனத்தை வழிமறித்தனர்.

இந்த பிரின்டிசி மற்றும் லெச்சே நகரங்களை இணைக்கும் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த, கொள்ளையர்கள் அங்கிருந்த பல கார்களை தீயிட்டுக் கொளுத்தி “நெருப்புச் சுவர்” போன்ற தடுப்பை உருவாக்கினர்.

“>

அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிகளுடன் அந்தப் பாதுகாப்பு வாகனத்தைச் சூழ்ந்த கொள்ளையர்கள், வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி வாகனத்தின் மேற்கூரையைத் தகர்த்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும், வாகனத்திற்குள் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் செயல்பட்டதால் கொள்ளையர்களால் பணத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. விரைந்து வந்த போலீசாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட அந்தக் கும்பல், அங்கிருந்த பொதுமக்களின் வாகனங்களைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை; போலீசார் தற்போது தப்பியோடிய கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.