வீட்டு வேலை, சமையல், 4 வயது மற்றும் 5 மாதக் குழந்தைகளைப் பராமரிப்பது என 95% குடும்பப் பொறுப்புகளைத் தலையில் சுமக்கும் ஒரு பெண்ணுக்கு, அவரது கணவர் செய்த ஒரு காரியம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடிக்கொண்டிருக்கும் அந்த கணவர், தனது மனைவிக்கு ‘ஓய்வு’ தேவை என்று கூறி, அவரிடம் ஆலோசிக்காமலேயே தனது தாயை ஒரு மாதம் தங்குவதற்கு அழைத்து வந்துள்ளார். “நான் எல்லாவற்றையும் சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறேன், எனக்குத் தனிமை தேவை” என்று மனைவி எவ்வளவோ சொல்லியும், கணவர் அதைக் காதில் வாங்காமல் தன் முடிவில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், தனது கணவனுக்குப் பாடம் புகட்ட ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இதுவரை கணவனுக்குச் சுமை தெரியக்கூடாது என்று இழுத்துப் போட்டுச் செய்த வேலைகளை அந்தப் பெண் நிறுத்திவிட்டார். “நான் சமைப்பேன், ஆனால் பாத்திரங்களை நீ தான் கழுவ வேண்டும்” என்று கறாராகக் கூறிவிட்டார். இது குறித்து கணவனிடம் கேட்டபோது, “உன்னால் தனியாகச் சமாளிக்க முடியும் என்று எனக்கு முழு நம்பிக்கை இல்லை” என்று அவர் கூறியது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்தது. இறுதியில், “உன் அம்மா வந்தால், நான் பார்க்கும் வேலைகளை நீ தான் பார்க்க வேண்டும், உனக்கு உன் அம்மா உதவி செய்யட்டும்” என்று அந்தப் பெண் ‘செக்’ வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்தப் பெண்ணுக்கு ஆதரவாகக் கருத்துகள் குவிகின்றன. “உதவி என்பது திணிக்கப்படக்கூடாது, அது ஒருவரின் சுதந்திரத்தைப் பறிப்பதாக இருக்கக்கூடாது” என்று நெட்டிசன்கள் அந்த கணவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
