இலங்கையில் நடைபெற்று வரும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தங்குமிடம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், கேப்டன் சல்மான் அலி ஆகா, பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி மற்றும் சைம் அயூப் உள்ளிட்ட வீரர்கள் தங்களது பேருந்தில் இருந்து இறங்கி, புழுதி பறக்கும் சாலைகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களுக்கு இடையே நடந்து செல்வதைக் காண முடிகிறது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத, ஒரு தொழிற்சாலை போன்ற சூழலில் வீரர்கள் தங்குவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பாகிஸ்தான் அணியைத் தங்களின் பாணியில் வறுத்தெடுத்து வருகின்றனர். “பகுதிநேர கூலி வேலையை முடித்துவிட்டு கிரிக்கெட் ஆடப் போகிறார்கள் போலிருக்கிறது” என்றும், “உண்மையில் இவர்களுக்கு இதுதான் தகுதி” என்றும் பலரும் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த இடத்தில் முறையான சாலைகளோ, நடைபாதைகளோ இல்லாமல் குப்பைகளும் இடிபாடுகளும் நிறைந்து காணப்படுவது ஒரு சர்வதேசத் தொடருக்கான தரத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருபுறம் பாகிஸ்தான் அணி ட்ரோல் செய்யப்பட்டாலும், மறுபுறம் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து ஐசிசி (ICC) மீது விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.