சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் இதயங்களை உருகச் செய்துள்ளது. ஒரு ஆட்டோ பயணத்தின் போது, பின் இருக்கையில் ஒரு சிறுமி மிகவும் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை ஒரு பயணி கவனிக்கிறார். ஆர்வத்துடன் அந்தச் சிறுமியைப் பற்றி ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்க, அவர் புன்னகையுடன் “அது என் மகள் ஆயுஷி” என்று கூறுகிறார். அந்தப் பதிலுக்குப் பின்னால் இருக்கும் வலி நிறைந்த உண்மைதான் தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்தச் சிறுமியின் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்தத் தந்தை தனது மகளைத் தனியாகவே வளர்த்து வருகிறார். வீட்டில் மகளைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், தினசரி ஆட்டோ ஓட்டச் செல்லும் போதெல்லாம் தனது மகளையும் கூடவே அழைத்துச் செல்கிறார்.

​ஆட்டோவின் இரைச்சல், மேடுபள்ளங்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தத் தந்தை மீதான நம்பிக்கையில் ஆயுஷி நிம்மதியாக உறங்குகிறாள். வேலையையும் குழந்தைப் பராமரிப்பையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் ஒரு ஒற்றைப் பெற்றோரின் (Single Parent) போராட்டத்தை இந்த வீடியோ பிரதிபலிக்கிறது. வீடியோவின் இறுதியில், அந்தப் பயணி தந்தைக்கும் மகளுக்கும் சிற்றுண்டி வாங்கித் தருவதும், அப்போது அந்தச் சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் மனதைத் தொடும் வகையில் உள்ளது. “உழைக்கும் வர்க்கத்தின் சத்தமில்லாத போராட்டங்களுக்கு இந்தத் தந்தை ஒரு உதாரணம்” என நெட்டிசன்கள் அவருக்குப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.