நாக்பூரைச் சேர்ந்த 90 வயதான வெங்கடாசலம் ஐயர் என்பவர், பல தசாப்தங்களாக கனரா வங்கியில் வாடிக்கையாளராக இருந்து வருகிறார். அந்த வங்கியின் மேனேஜர் மீது கொண்ட அபார நம்பிக்கையில், அவர் சொன்ன “முக்கியமான பாலிசி” என்ற வார்த்தையை நம்பி, ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் பிரீமியம் கட்டும் ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்துள்ளார். இரண்டாவது முறை பணம் எடுக்கப்பட்ட போதுதான், அவரது குடும்பத்தாருக்கு விஷயம் தெரியவந்தது.
ஆவணங்களைச் சரிபார்த்த போதுதான், அந்த பாலிசி 2124-ஆம் ஆண்டு, அதாவது இன்னும் 100 ஆண்டுகள் கழித்துதான் முதிர்வடையும் (Maturity) என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. 90 வயது முதியவருக்கு நேரடியாகப் பாலிசி தர முடியாது என்பதால், அவரது மகளுடன் கூட்டு வங்கி கணக்கு தொடங்கி, மகளின் பெயரில் காப்பீடு செய்துவிட்டு, பிரீமியத்தை மட்டும் தாத்தாவின் கணக்கில் இருந்து மேனேஜர் கழிக்கச் செய்துள்ளார். கையெழுத்து கூடப் போட முடியாத நிலையில் இருந்த பெரியவரிடம், டார்கெட் முடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஆவணங்களை வங்கியே நிரப்பி மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்துப் பெரியவரின் பேரன் சாகேத் சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீயாகப் பரவியது. இதையடுத்து, வங்கியின் மண்டலத் தலைவர்கள் நேரில் வந்து மன்னிப்பு கேட்டதோடு, ஒரு வாரத்திற்குள் மொத்தப் பணத்தையும் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளனர். “மூத்த குடிமக்களை இப்படித்தான் ஏமாற்றுவதா?” என வங்கிகளுக்கு எதிராக நெட்டிசன்கள் தற்போது கொதித்து எழுந்துள்ளனர்.
