பஞ்சாப் மாநிலம் தரண் தரண் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில், 19 வயது மாணவன் தனது சக மாணவியைச் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரியின் இரண்டாம் செமஸ்டர் படித்து வந்த பிரின்ஸ்ராஜ் சிங் என்ற மாணவன், 20 வயதான சந்தீப் கவுர் என்ற மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை காலை சுமார் 9 மணியளவில் வகுப்பறையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பிரின்ஸ்ராஜ் தனது பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த மாணவியின் நெற்றியில் சுட்டான்.

இதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட அந்த மாணவன், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

கடந்த மூன்று மாதங்களாகவே அந்த மாணவன் சந்தீப் கவுருக்குத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு மாணவியின் வீட்டிற்குச் சென்று திருமணத் தீர்மானம் பேசிய அவனை உறவினர்கள் கண்டித்து அனுப்பியுள்ளனர்.

நீதிபதியாக வேண்டும் என்ற கனவோடு கல்லூரிக்குச் சென்ற மாணவி, வகுப்பறையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டது சக மாணவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கியைக் கைப்பற்றியதோடு, வகுப்பறையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வுக்கு எடுத்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.