ஹைதராபாத்தின் கைராதாபாத் ஆனந்த் நகர் காலனியில் உள்ள பவானா அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு கோரமான லிஃப்ட் விபத்து நிகழ்ந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராதா (58) என்ற மூதாட்டி, தனது 13 மாதப் பேரனுடன் கட்டிடத்தின் லிஃப்ட் பயன்படுத்துவதற்காகப் பொத்தானை அழுத்தியுள்ளார்.
அப்போது லிஃப்ட் அறை தரைத்தளத்திற்கு வருவதற்கு முன்பே அதன் கதவு திடீரெனத் திறந்துள்ளது. லிஃப்ட் வந்துவிட்டது என்று நினைத்து ராதா முன்னோக்கி அடியெடுத்து வைத்தபோது, அவர் எதிர்பாராதவிதமாக நேராக லிஃப்ட் குழிக்குள் விழுந்தார்.
இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த ராதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த குழந்தையும் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கைராதாபாத் காவல்துறையினர், குழிக்குள் இருந்த மூதாட்டியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ள போலீசார், லிஃப்ட் பராமரிப்பில் ஏற்பட்ட கடுமையான அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தவர்கள் யார் என்பதைத் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
