சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில், சாக்கடை கால்வாய்க்குள் சிக்கியிருந்த வாலிபர் ஒருவர் ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலாஸ்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பெரிய சாக்கடை கால்வாயில், வெள்ளிக்கிழமை காலை திடீரென ஒரு மனித கை மட்டும் வெளியே தெரிவதைக் கண்டு பாதசாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது, கால்வாயின் அடியில் சிக்கியிருந்த ஒரு வாலிபர் உதவி கேட்டு அலறுவது கேட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சிமெண்ட் சிலாப்புகளை உடைத்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த வாலிபர் பத்திரமாக வெளியே மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட நபர் குமார் சவுகான் (32) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். சில நேரங்களில் சிரித்துக் கொண்டே பேசியதால், அவரது மனநிலை குறித்து போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, அந்த வாலிபர் கடந்த ஐந்து நாட்களாக அந்தக் குறுகிய கால்வாய்க்குள் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஐந்து நாட்களாக உணவு, நீரின்றி சாக்கடைக்குள் இருந்தும் அவருக்குப் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மீட்புப் பணி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் எவ்வாறு கால்வாய்க்குள் சென்றார்? யாராவது தள்ளிவிட்டார்களா அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பற்ற முறையில் உள்ள கால்வாய் குறித்துப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
