டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் கன்டெய்னர் லாரியை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று சாகசத்தில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீஸார் நேற்று (பிப்ரவரி 8) கைது செய்தனர்.

அதாவது கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ஹரியானாவின் ரிகாட் கிராமம் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்ற இரண்டு கன்டெய்னர் லாரிகள், சாலையின் குறுக்கும் நெடுக்குமாகஅதிவேகத்தில் சென்றன. பிற வாகன ஓட்டிகளின் உயிரைப் பணயம் வைக்கும் வகையில் அமைந்த இந்தச் சாகசக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

வீடியோவை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், வாகனப் பதிவு எண்ணைக் கொண்டு ஓட்டுநரை அடையாளம் கண்டனர். கைதானவர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுயைச் சேர்ந்த சபீர் என்பது தெரியவந்தது. அவர் ஓட்டிச் சென்ற கன்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சபீர், “எனது வாழ்நாளில் இப்படி ஒரு தவறைச் செய்ததில்லை, இதுவே முதல் முறை; இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவுச் சாலைகளில் விதிகளை மீறிச் செயல்படும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.