மத்தியப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஹமிடியாவில் உயிருக்குப் போராடும் நோயாளிகளின் உறவினர்களிடம் மருத்துவர் போல நடித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடிக்கு மருத்துவமனை ஊழியர்களே உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தூர் பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர காக்ரே என்ற நபர், மருத்துவமனைக்குள் மருத்துவர் போலவே வலம் வந்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் விவரங்களைச் சேகரித்து, அவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து “உறவினரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது; உடனே மேல் சிகிச்சை தேவை” எனப் பேசி நம்பிக்கையை ஏற்படுத்தி பணம் பறித்துள்ளார்.
இந்த மோசடி குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் மருத்துவமனை ஊழியர்களே நோயாளிகளின் பெயர், வார்டு எண், தொலைபேசி எண் மற்றும் நோயின் தன்மை குறித்த ரகசியத் தகவல்களை அந்த நபருக்கு வழங்கியுள்ளனர். இதற்காக வசூலாகும் பணத்தில் 20 சதவீதத்தை கமிஷனாக ஊழியர்கள் பெற்றுள்ளனர். இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவரிடம் ஏமாந்துள்ள நிலையில், 7 ஊழியர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
மோசடி நபர் பயன்படுத்திய உத்திகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில்: “உங்கள் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை உள்ளது, உடனடியாக ‘எக்கோ’ பரிசோதனை செய்ய 10 ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள்” என மிரட்டியுள்ளார். “தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து, உடனே இந்த ‘கியூ-ஆர்’ கோடுக்கு (QR Code) பணம் செலுத்துங்கள்” எனக் கூறி அவசரப்படுத்தியுள்ளார்.
அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வரிசையில் நிற்க நீண்ட நாட்களாகும் என்றும், தன்னிடம் பணம் கொடுத்தால் உடனே முடித்துக் கொடுப்பதாகவும் ஆசை காட்டியுள்ளார். தொடர் புகார்கள் வந்ததையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். சைபர் க்ரைம் போலீஸார் அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து 3 நாட்கள் பின்தொடர்ந்து, இந்தூரில் வைத்து அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து பெறப்பட்ட ஆடியோ ஆதாரங்கள், அவர் எப்படியெல்லாம் மக்களை மிரட்டிப் பணம் பறித்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சுனீத் டாண்டன் கூறுகையில், “அரசு மருத்துவமனையில் பணியாற்றும் எந்தவொரு மருத்துவரும் அல்லது ஊழியரும் நோயாளிகளிடம் தனியாகப் பணம் கேட்க மாட்டார்கள்; கியூ-ஆர் கோடு அனுப்ப மாட்டார்கள். அப்படி யாராவது கேட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கும், மருத்துவமனை பாதுகாப்புப் பிரிவிற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதுவரை மூன்று புகார்கள் மூலம் ரூ.30,000 பறிபோனது தெரியவந்துள்ளது. ஆனால், உண்மையான பாதிப்பு பல லட்சங்களைத் தாண்டும் என அஞ்சப்படுகிறது.
