உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 22 வயது இளைஞர் ஒருவர், ரத்த அழுத்தம் அதிகரித்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீரட்டின் கெர் நகரைச் சேர்ந்தவர் முகமது கைஃப் (22). இவர் தனது தந்தை ஃபரூக்கிற்குச் சொந்தமான சொத்து வியாபாரத்தில் உதவியாக இருந்து வந்தார். சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’  செய்வதிலும் இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் ஹெட்ஃபோன் அணிந்து கொண்டு ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த கைஃப், திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

மயக்கமடைந்த கைஃப்பை உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போது கைஃப்பின் ரத்த அழுத்தம் (BP) 300-க்கும் அதிகமாக இருந்தது. மிக அதிகப்படியான ரத்த அழுத்தத்தால் மூளையில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து, ரத்தக்கசிவு ஏற்பட்டதே மரணத்திற்குத் தார்மீகக் காரணமாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

கைஃப் கடந்த 10 ஆண்டுகளாகவே உயர் ரத்த அழுத்தப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டின் போது ஏற்பட்ட பரபரப்பும், ஹெட்ஃபோன் அணிந்து நீண்ட நேரம் விளையாடியதும் அவரது ரத்த அழுத்தத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவதால் இளைஞர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.