விருதுநகரில் நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியையும் பாஜகவையும் கடுமையாகச் சாடினார். இந்த எழுச்சியான கூட்டத்தைப் பார்க்கும்போது இது நிர்வாகிகள் சந்திப்பா அல்லது சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடா என்ற சந்தேகம் எழுவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்தியாவிலேயே 5 லட்சம் நிர்வாகிகளையும், 50 லட்சம் உறுப்பினர்களையும் கொண்ட ஒரே இளைஞரணி திமுகதான் என்றும், அரசியல் அறிவே இல்லாமல் சிலர் வெற்றுக்கூச்சல் போடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
பாசிச சக்திகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ்நாடு அவர்களுக்குக் கிடைக்காது என்றும், தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ (Out of Control) தான் என்றும் உதயநிதி ஆவேசமாகப் பேசினார்.
கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத கூட்டங்கள் தமிழ்நாட்டில் சுற்றித் திரிவதாகவும், அவர்கள் என்னதான் உளறினாலும் வரும் தேர்தலில் திமுகவே மீண்டும் வெற்றி பெறும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை ‘முரட்டு அடிமை’ என்று கிண்டல் செய்த உதயநிதி, அவர் தலையை நிமிர்த்திப் பார்த்து நடந்தால்தான் நேராகச் செல்ல முடியும் என்று அறிவுறுத்தினார்.
மோடி மற்றும் அமித்ஷாவின் கால்களைப் பார்த்துக் கொண்டே நடந்தால் முட்டுச் சந்தில்தான் போய் நிற்க வேண்டியிருக்கும் என்று விமர்சித்த அவர், எடப்பாடி பழனிசாமி இந்தியாவிலேயே மிகப்பெரிய அடிமையாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
