ஒடிசா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆறு சிறுவர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோச்சிங் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவியை வழிமறித்த ஒரு கும்பல் இந்தத் தகாத செயலில் ஈடுபட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தை வீடியோ எடுத்ததுடன் யாரிடமும் சொல்லக்கூடாது என்று அச்சிறுமியை மிரட்டியுள்ளனர். இது குறித்த வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் துரைகேலா போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் 17 வயது சிறுவன் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பதால் சட்ட நடைமுறைகள் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

எனினும் இந்த வன்கொடுமையை முன்னின்று நடத்திய முக்கியக் குற்றவாளியை மட்டும் ஒரு வயது வந்த நபராகக் கருதி விசாரணை நடத்த அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்படும் என்று ஐஜி ஹிமான்ஷு லால் தெரிவித்துள்ளார்.

குற்றத்தைப் படம் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட கைபேசியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.