நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவரின் மனைவி காவியா (20). இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு அழகான பெண் குழந்தை இருந்தது.

அரசுப் பள்ளி ஆசிரியையான மாமியார் செந்தமிழ்ச்செல்வி மற்றும் மாமனார் பழனித்துறை ஆகியோர் காவியாவைத் தினந்தோறும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

பிரச்சனையைத் தவிர்க்க விரும்பிய கணவர் சிவபாலன், காவியாவைப் பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.

மனவேதனையில் இருந்த காவியா, நேற்று முன்தினம் இரவு தனது 6 மாத குழந்தையைத் தனது வயிற்றில் துப்பட்டாவால் இறுகக் கட்டிக்கொண்டு, அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “என் கணவர் ரொம்ப நல்லவர், அவர் என் சாவுக்குக் காரணம் இல்லை. என் மாமனார் மற்றும் மாமியார்தான் இதற்குக் காரணம்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.