கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா நள்ளிரவு நேரத்தில் சாதாரண உடையில் ஆட்டோவில் பயணம் செய்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி மாநகரப் பகுதியில் இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், மீட்டரைப் பயன்படுத்தாமல் விதிகளை மீறுவதாகவும் வந்த புகார்களைத் தொடர்ந்து ஆட்சியர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
சாதாரண பெண் பயணி போலச் சென்ற ஆட்சியரை அடையாளம் தெரியாமல் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீட்டரில் ஓட்டினால் எப்படிச் சம்பாதிக்க முடியும் என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகள் அவர் மாவட்ட ஆட்சியர் என்பதை விளக்கியதும் அந்த ஓட்டுநர் அதிர்ச்சியில் உறைந்தார்.
ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 குழுக்கள் கொச்சி மாநகரம் முழுவதும் சுமார் 365 ஆட்டோக்களில் தீவிர ஆய்வு நடத்தின. இந்தச் சோதனையில் மீட்டர் பயன்படுத்தாதது மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக மொத்தம் 174 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குறிப்பாக 72 ஆட்டோக்களில் மீட்டரே இல்லாதது கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகப் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. நள்ளிரவு சோதனையின் போது ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசிய ஆட்சியர் பிரியங்கா, பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் உகந்த ஆட்டோ கலாச்சாரத்தை உருவாக்க ஒத்துழைக்குமாறு அறிவுரை வழங்கினார். ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
