சமூக வலைதளங்களில் ‘வியூஸ் பெறுவதற்காக, தெருநாய் ஒன்றை 100-வது நாளில் சமைத்து உண்ணப்போவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டு வந்த இளைஞரின் கொடூரச் செயல் முறியடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலம் ஒருவர், நாய் ஒன்றைக் கொண்டு ‘100 நாள் சவால்’ என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அந்த வீடியோக்களில், நாயுடன் விளையாடுவது போலவும், அதைக் கொஞ்சுவது போலவும் காட்சியளிக்கும் அவர், “இந்த 100 நாள் சவால் முடிந்த பிறகு, இந்த நாயைச் சமைத்து பிரியாணி செய்து சாப்பிடுவேன்” என்று தொடர்ந்து கூறி வந்தார்.
இந்த இளைஞரின் செயலுக்குத் தொடக்கத்திலிருந்தே விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இருப்பினும், அதைப் பொருட்படுத்தாத அவர் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவேற்றி வந்தார். இந்தச் சவால் தொடங்கிய போது ‘ஜிம்மி’ என்று பெயரிடப்பட்ட அந்த நாய் சிறிய குட்டியாக இருந்தது. 92-வது நாள் வீடியோவில் அது பெரிய நாயாக வளர்ந்திருந்தது. அந்த நாயைக் கொல்லப் போவதாக அவர் மீண்டும் மீண்டும் கூறியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
View this post on Instagram
சவால் முடிய இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், விழிப்புணர்வுடன் செயல்பட்ட விலங்கு நல ஆர்வலர்கள் அந்த இளைஞரின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். உடனடியாக அங்கு விரைந்த மீட்புக்குழுவினர், அவரிடமிருந்து அந்த நாயைப் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த இளைஞரைக் கண்டித்த மீட்புக்குழுவினர், அவரை மன்னிப்புக் கேட்கச் செய்தனர். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மீட்கப்பட்ட நாய் ‘ஜிம்மி’ தற்போது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வீடியோக்களையும் மீட்புக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வெறும் விளம்பரத்திற்காக வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்தும் இத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘வியூஸ்’ பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் இத்தகைய இன்புளுயன்சர்களின் போக்கு கவலையளிப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
