இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளின்படி, இணைய வங்கி, மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ செயலி வழியாக மேற்கொள்ளப்படும் IMPS பணப் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் சேவை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இதுவரை 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ இருந்த இந்த வசதிக்கு, இனி 25,000 ரூபாய்க்கு மேல் அனுப்பப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதன் அளவைப் பொறுத்து 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை (கூடுதல் ஜிஎஸ்டி-யுடன்) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறிப்பாகத் தினமும் சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளைச் செய்யும் சிறு குறு தொழிலாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், 25,000 ரூபாய்க்கும் குறைவான பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் ஏதுமில்லை என்பதும், வங்கி கிளைகளுக்கு நேரில் சென்று பணம் அனுப்பும் போது இந்தக் கட்டணங்கள் பொருந்தாது என்பதும் வாடிக்கையாளர்களுக்குச் சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் சூழலில், இத்தகைய கட்டண உயர்வு வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சுமையாக அமையும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
