அதிசயமான ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, கணவனின் துரோகத்தை அம்பலப்படுத்திய மனைவி அவருக்குச் சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரி வரும் சம்பவம் சீனாவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த நியூ நா என்ற பெண், தனது கணவர் காவோ பெய் கடந்த 5 ஆண்டுகளாகத் தனது அலுவலகத் தோழியுடன் தகாத உறவில் இருந்ததைச் சமூக வலைதளத்தில் ஆதாரங்களுடன் வெளியிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர், தனது பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகத் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனிப்பட்ட ஒழுக்கக் கேடுகள் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க உரிமம் வழங்காது எனக் கூறி, மனைவி அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் கணவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண், தனது மன்னிப்பு வீடியோக்களில் கணவரின் துரோகம் மற்றும் பணப் பரிமாற்ற ஆதாரங்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு, “நீங்கள் உங்கள் காதலியின் மீது வைத்திருப்பது உண்மையான அன்பு, உங்களைச் சூது என்று சொன்னதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்” என நையாண்டியாகப் பதிவிட்டு வருகிறார்.

இந்த விசித்திரமான மன்னிப்புப் பதிவுகள் இணையத்தில் லட்சக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டு வருவதுடன், அந்தப் பெண்ணின் துணிச்சலையும் நெகிழ்ச்சியுடன் பலரும் பாராட்டி வருகின்றனர்.