பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்று, அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுக்கொண்ட பிறகு, முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான கிரிமினல் வழக்கை ஒரு பெண் தொடர்ந்து நடத்த முடியாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணமான தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2013-ல் அந்த பெண் தனது கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையில், குடும்ப நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியதை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் 20 லட்சம் ரூபாய் நிரந்தர ஜீவனாம்சமாக பெற்றுக்கொள்ள அந்த பெண் ஒப்புக்கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விவாகரத்து உறுதி செய்யப்பட்ட போதிலும், அந்த பெண் தன் முன்னாள் கணவர் குடும்பத்தினர் மீதான கிரிமினல் வழக்கை வாபஸ் பெறாமலும், சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் இழுத்தடித்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதி அனூப் குமார் தண்டா, விவாகரத்து ஒப்பந்தத்தின் மூலம் முழு பலன்களையும் அடைந்த பிறகு, ஒரு பெண் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கிரிமினல் வழக்கை தொடர்வது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று சுட்டிக்காட்டினார். மேலும், முதியவர்களான மாமனார் மற்றும் மாமியார் மீதான இந்த கிரிமினல் வழக்கு விசாரணையை முழுமையாக ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.