திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதலித்துத் திருமணம் செய்த கணவருடன் தன்னைச் சேர்த்து வைக்கக்கோரி, இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரும், தியாகராஜன் என்பவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தியாகராஜனின் தந்தை யுவராஜ் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகனை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனால் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், வறுமை காரணமாகத் தியாகராஜன் தனது மனைவியைப் பிரிந்து மீண்டும் தந்தையிடம் தஞ்சமடைந்துள்ளார். தற்போது ஒரு பெண் குழந்தையுடன் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் அகிலா, தனது காதல் கணவர் தியாகராஜனுடன் தன்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜோலார்பேட்டை காவல் நிலையம் முன்பாக அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினார்.

கைக்குழந்தையுடன் இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சொத்து மற்றும் பணத்திற்காக மனைவியைக் கைவிட்டுச் சென்ற கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.