வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 77 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற அந்த இளைஞர், மது போதையில் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று செலவுக்குப் பணம் கேட்டுள்ளார்.

மேலும் மூதாட்டி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர், மூதாட்டியை நகத்தால் கீறியும் அடித்துத் துன்புறுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த மூதாட்டி மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இறந்துவிட்டதாகக் கருதி அஜித்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் மறுநாள் காலையில் மூதாட்டியின் உறவினர்கள் வந்து பார்த்தபோது அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். முதலில் பயத்தின் காரணமாகத் தாக்குதல் சம்பவத்தைப் பற்றி மட்டும் குறிப்பிட்ட மூதாட்டி, பின்னர் உடல் வலியால் துடித்த நிலையில் தனது மகளிடம் நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார்.

இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜித்குமாரைக் கைது செய்தனர். தற்போது பாதிக்கப்பட்ட மூதாட்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.