நெல்லை மாவட்டம் மானூர் அருகே வரதட்சணைக் கொடுமையால் எட்டே மாதங்களில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் குப்பனாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கும் பாக்கியத்தாய் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது தங்கம் விலை ஒரு லட்சத்தைக் கடந்திருந்த நிலையிலும், பெண் வீட்டார் சீர் செய்துள்ளனர். இருப்பினும், கூடுதலாக 10 பவுன் நகை அல்லது 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு அந்தோணி தனது மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் சென்றுவிட்டு வீடு திரும்பிய பாக்கியத்தாயிடம் அந்தோணி வழியிலேயே வரதட்சணை தொடர்பாகத் தகராறு செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்தோணி, பாக்கியத்தாயைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை அருகில் இருந்த கிணற்றில் வீசி எறிந்துள்ளார். பின்னர் எதுவுமே நடக்காதது போல ஊருக்குள் சுற்றி வந்த அவர், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார்.

பாக்கியத்தாய் காணாமல் போன சில மணி நேரங்களிலேயே அவரது உடல் கிணற்றில் மிதந்ததால் போலீசாருக்குச் சந்தேகம் வலுத்தது. பொதுவாகத் தற்கொலை செய்து கொண்டால் உடல் மிதக்க நீண்ட நேரம் ஆகும் என்ற அறிவியல் பூர்வமான சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

பாக்கியத்தாயின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் அந்தோணியைப் பிடித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், வரதட்சணைக்காக மனைவியைக் கொலை செய்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். தற்கொலை என்று நம்ப வைக்க முயன்ற அந்தோணியின் நாடகம் போலீசாரின் நுணுக்கமான விசாரணையில் அம்பலமானது.

இதனையடுத்து அந்தோணியைக் கைது செய்த மானூர் போலீசார், இந்தத் கொடூரக் கொலையில் அவரது குடும்பத்தினருக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.