திருச்செந்தூர் அருகே திருமணம் முடிந்த இரண்டாவது நாளிலேயே, வீட்டில் இருந்த பணம் மற்றும் துணிகளுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (35). பழ வியாபாரம் செய்து வரும் இவருக்குத் திருமணம் செய்வதற்காகப் பெண் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் அறிமுகமாகியுள்ளார்.
அந்தப் பெண் ஆதரவற்றவர் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த 20-ஆம் தேதி திருச்செந்தூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பாஸ்கர் அந்தப் பெண்ணுக்கு 4 கிராம் தங்கத் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த இரண்டு நாட்களில், அதாவது கடந்த 22-ஆம் தேதி பாஸ்கர் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர், தனது மனைவியைக் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டைச் சோதித்துப் பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.10,000 ரொக்கம் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட துணிகளை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் மாயமானது தெரியவந்தது. மேலும், திருமணத்தின் போது கட்டிய தங்கத் தாலியையும் அந்தப் பெண் கழற்றி எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது
இது குறித்து பாதிக்கப்பட்ட பாஸ்கர் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
