தமிழகத்தில் நேற்று மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மரியாதை செலுத்திப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை “பத்து தோல்வி பழனிசாமி” என்று கடுமையாக விமர்சித்தார். “வாழ்க்கை முழுவதும் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தால் சூரியன் தெரியாது, ஒருமுறை நிமிர்ந்து பார்த்தால் தான் சூரியனின் வெப்பம் புரியும்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு அவர் பதிலடி கொடுத்தார்.
மேலும், டெல்லியின் ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு ஒருபோதும் தலைவணங்காது என்றும், பா.ஜ.க அரசின் வஞ்சகத்தைத் தட்டிக்கேட்கும் தைரியம் தி.மு.க-வுக்கு மட்டுமே இருப்பதாகவும் முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழ்நாட்டின் பண்பாட்டை அழிக்க நினைக்கும் சக்திகளை எதிர்த்து வெற்றி பெறுவோம் என்று உறுதிபடத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டு மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் பேசினார். இந்தப் பேச்சு தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
