சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதை நாம் தடுப்பதால், மத்திய அரசு தர வேண்டிய 3,458 கோடி ரூபாய் நிதியைத் தராமல் வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

“பணத்தையும் அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து போக நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல; அண்ணா, கலைஞர் வழியில் வந்த தமிழ் போராளிகள்” என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.

பாஜக-வையும் அதிமுக-வையும் கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், “டபுள் இன்ஜின் என்று சொல்லி வட மாநில மக்களை ஏமாற்றுவது போல தமிழ்நாட்டில் உங்கள் டப்பா இன்ஜின் ஓடாது” என்று சாடினார்.

கடந்த தேர்தலில் தோற்ற பிறகும் எந்தப் பாடமும் கற்காமல், கொத்தடிமை கூட்டமான அதிமுக-வின் தோளில் அமர்ந்து கொண்டு பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்ப்பதாக அவர் விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடியால் எப்படிச் சிரிக்காமல் சொல்ல முடிகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தேர்தல் காலம் வந்துவிட்டதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், அவர் ஒவ்வொரு முறையும் வந்து பழைய வடையைச் சுட்டுவிட்டுப் போவதாகவும், அந்த மாவு இப்போது புளித்துப் போய்விட்டதாகவும் கிண்டலாகக் கூறினார்.

தமிழ்த்தாயின் தியாகப் பிள்ளைகளான மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக் காற்றுதான் திமுக-வை இயக்கிக் கொண்டிருக்கிறது என்றும், வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்றும் தனது உரையில் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.