தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க-வை ‘தீய சக்தி’ என்றும், அ.தி.மு.க-வை ‘ஊழல் சக்தி’ என்றும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழக மக்கள் இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களித்து சோர்வடைந்துவிட்டதாகவும், இனி அ.தி.மு.க தமிழகத்தை ஆளவே கூடாது என்றும் அவர் முதல்முறையாக நேரடித் தாக்குதலை நடத்தினார்.

விஜய்யின் இந்த அதிரடி பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

விஜய்யைத் ‘துரோகி’ என்றும் ‘பனையூர் பண்ணையார்’ என்றும் சாடியுள்ள அந்தப் பதிவு, திரைப்பட டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த விஜய்தான் உண்மையான ஊழல்வாதி எனக் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், தனது படம் வெளியாக வேண்டும் என்பதற்காக அன்றைய முதலமைச்சர் வீட்டில் ஐந்து மணி நேரம் கைகட்டி காத்திருந்தவர் விஜய் என்றும், மத்திய அரசுக்கு அ.தி.மு.க ஒருபோதும் அடிமை இல்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனைத் தனது கட்சி ஒருங்கிணைப்பாளராக வைத்துக்கொண்டு, அதே ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விஜய் சொல்வது நகைப்புக்குரியது என்றும் அ.தி.மு.க தரப்பு கூறியுள்ளது.

கரூரில் உயிரிழந்த 41 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல், அவர்களைத் தனது இடத்திற்கே வரவழைத்த விஜய்யின் செயல் ‘நார்சிசிஸ’ குணம் கொண்டது என்றும், ரசிகர்களையே ஏமாற்றும் ஒரு இயக்குநரின் நடிகராகவே விஜய் இன்னும் இருக்கிறார் என்றும் அ.தி.மு.க மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.