காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் சபரிவாசன், நாய் கடித்த விபரத்தை மறைத்து முறையான சிகிச்சை பெறாததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சபரிவாசனை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு வெறிநாய் கடித்திருந்தது.
தந்தை திட்டுவார் என்ற அச்சத்தில் இந்தத் தகவலை மறைத்த மாணவர், தனது பாட்டியின் ஆலோசனையின் பேரில் காயம் ஏற்பட்ட இடத்தில் பச்சிலை மூலிகையை வைத்துக் கட்டியதாகக் கூறப்படுகிறது. உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நிலையில், கடந்த வாரம் சபரிவாசனின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.
அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சபரிவாசன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாய் கடித்து மூன்று மாதங்களுக்குப் பிறகு நோய் பாதிப்பு தீவிரமடைந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய் உள்ளிட்ட விலங்குகள் கடித்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடித் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.
