இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அவரை கர்ப்பமாக்கிய அதே வயதுடைய சிறுவனைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள அச்சிறுமி, பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரங்களில் வீட்டில் செல்போனில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். அப்போது, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது, ஓடும் மின்சார ரயிலிலேயே அந்தச் சிறுவன் சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார். இந்த விவகாரம் வெளியே யாருக்கும் தெரியாத நிலையில், இருவரும் வழக்கம்போல் தங்களது வீடுகளில் வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமிக்குத் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், சிறுமியைச் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

தகவலறிந்து வந்த  போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்னையைச் சேர்ந்த சிறுவன் ஆசை வார்த்தை கூறி சிறுமியைத் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அந்தச் சிறுவன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைச் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் நேரத்தில், வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகள் சமூக வலைதளங்களால் திசைமாறும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.