நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாகவும், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த காளியம்மாள், அக்கட்சியிலிருந்து கடந்த ஆண்டு அதிரடியாக விலகினார். சீமானின் வலதுகரமாகப் பார்க்கப்பட்ட அவர் விலகியது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்பட்டது. அதன் பிறகு அவர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று பல பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், தற்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் உடைத்துவிட்டு, அவர் அதிமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவர் முறைப்படி கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த காளியம்மாள், ஏற்கனவே நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தற்போது அதிமுக போன்ற ஒரு பெரிய கட்சியில் இணைவதன் மூலம், வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு (சீட்) கிடைக்கும் என்றும், அவர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தூத்துக்குடி தொகுதியில் அவர் களம் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது, அந்தப் பகுதியில் இப்போதே அரசியல் சூட்டைக் கிளப்பியுள்ளது.