கோவா மாநிலத்தில் தனது தோழிகளான இரண்டு ரஷ்ய நாட்டுப் பெண்களைக் கொலை செய்த வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி லியோனோவ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எலினா வானீவா மற்றும் எலினா கஸ்தானோவா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நடனக் கலைஞரான கஸ்தானோவா, பட்டாசு கலைஞரான அலெக்சியிடம் இருந்து பணம் மற்றும் நடனத்தின் போது தலையில் நெருப்பைத் தாங்கிப் பிடிக்கப் பயன்படும் ரப்பர் கிரீடம் ஒன்றை வாங்கியுள்ளார். மற்றொரு பெண் வானீவாவும் இவரிடம் பணம் கடன் பெற்றுள்ளார்.
வாங்கிய கடன் மற்றும் கிரீடத்தைத் திருப்பித் தராததால் ஆத்திரமடைந்த அலெக்சி, கடந்த ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இருவரையும் வெவ்வேறு இடங்களில் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை அல்ல என்றும், அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தால் தூண்டப்பட்டவை என்றும் போலீசார் கருதுகின்றனர். கைது செய்யப்பட்ட அலெக்சி மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிவதாகவும், எப்போதும் போதைப்பொருள் பிடியில் இருப்பவர் என்றும் கூறப்படுகிறது.
அவரது கைபேசியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டெடுத்த போலீசார், அவர் ஒரு தொடர் கொலையாளியாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். மேலும், கடந்த ஜனவரி 12-ஆம் தேதி கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மிருதுஸ்மிதா சைங்கியா என்ற பெண்ணின் மரணத்திலும் இவருக்குத் தொடர்பு இருக்கிறதா என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
