அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கண்டு திமுக ஆட்டம் கண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்:

பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உரிமைத்தொகை.

ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தருதல்.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல்.

5 லட்சம் மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன் கூடிய ‘அம்மா இருசக்கர வாகனம்’.

இந்த அறிவிப்புகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி, “திமுகவின் திட்டங்களை அப்படியே காப்பியடித்து அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்” என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இதற்குப் பதிலடி அளித்தார். “அதிமுகவின் தேர்தல் அறிக்கையை நாங்கள் காப்பியடிக்கவில்லை. இந்த 5 வாக்குறுதிகளைக் கேட்ட உடனேயே திமுக ஆட்டம் கண்டுவிட்டது. நான் மீண்டும் மதுரை மேற்கு தொகுதியிலேயே போட்டியிடப் போகிறேன்” என்றார்.

டி.டி.வி. தினகரனை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கூட்டணி தர்மத்தில் இருந்தவர்களை மீண்டும் அழைக்க பாஜக நினைப்பது தவறில்லை. அது அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அதை நாம் தவறாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்று குறிப்பிட்டார்.