அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தான் சந்திக்கவில்லை என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இன்று நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. வரவிருக்கும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவது குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்த தனியரசு, சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தச் சூழலில், அவர் திடீரென எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தகவல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள தனியரசு, எடப்பாடி பழனிசாமியைத் தான் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தச் சந்திப்பு குறித்து உலவிய வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.