தன் கள்ளக்காதலை நேரில் பார்த்த மூன்று வயது மகனை, மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த தாய்க்கு குவாலியர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொல்லப்பட்ட சிறுவன் தன் தாயின் கனவில் தோன்றி பயமுறுத்தியதால், ஓராண்டுக்குப் பிறகு இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் தியான் சிங் என்ற காவலர் வசித்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி, இவருடைய 3 வயது மகன் சன்னி என்ற ஜதின், வீட்டின் இரண்டாவது மாடி மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தான். ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என்றே தந்தை தியான் சிங் நம்பி வந்தார்.
அன்று மொட்டை மாடியில் தியான் சிங்கின் மனைவி ஜோதி ரத்தோர், தனது பக்கத்து வீட்டுக்காரரான உதய் என்பவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். எதிர்பாராத விதமாக அங்கு வந்த சிறுவன் ஜதின், தன் தாயை தவறான நிலையில் கண்டுள்ளான். இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், பெற்ற தாய் என்றும் பாராமல் ஜோதி தனது மகனை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.
மகன் இறந்து ஓராண்டு ஆன நிலையில், ஜோதியின் மனநிலை பாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் அலறித் துடித்த அவர், தனது மகன் கனவில் வந்து தன்னை மிரட்டுவதாகக் கூறி அஞ்சியுள்ளார். மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில், ஒருகட்டத்தில் தனது கணவரிடம் உண்மையை ஒப்புக்கொண்டார்.
“மகன் ஜதின் என் கனவில் அடிக்கடி வருகிறான், அவன் ஆன்மா என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை” என்று கூறி, தானும் தனது கள்ளக்காதலனும் சேர்ந்து சிறுவனைக் கொன்றதை அழுதுகொண்டே ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தியான் சிங் தனது மனைவியின் வாக்குமூலத்தை ரகசியமாக வீடியோ எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், ஜோதி ரத்தோரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ஜோதியின் கள்ளக்காதலன் உதயை நீதிமன்றம் விடுவித்தது.
