உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், திருமணமான நான்கு மாதங்களிலேயே குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையைச் செய்துவிட்டு சுமார் நான்கு மணி நேரம் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்த கணவர், பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அதாவது பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் சிங் படோரியா (24) மற்றும் ஸ்வேதா சிங் (22) ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். முதலில் குஜராத் மாநிலம் சூரத்திற்குச் சென்ற இவர்கள், பின்னர் கான்பூர் வந்து குடியேறினர். சச்சின் அங்கு ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
திருமணமான சில காலத்திலேயே, தனது மனைவியின் நடத்தையில் சச்சினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸ்வேதா வேறு சில இளைஞர்களுடன் பழகி வருவதாக அவர் கருதியுள்ளார். இதனை உறுதிப்படுத்தத் திட்டமிட்ட சச்சின், சனிக்கிழமைதான் ஊரிலிருந்து திரும்புவதாக மனைவியிடம் கூறிவிட்டு, வெள்ளிக்கிழமை இரவே எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, தனது வீட்டின் அருகே அக்கம் பக்கத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் ஸ்வேதா இருப்பதைச் சச்சின் கண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், இரு தரப்பையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போலீஸார் சென்ற பிறகு, தம்பதியிடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சச்சின், ஸ்வேதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், உடலை ஒரு போர்வையால் சுற்றி வீட்டிற்குள்ளேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றார். கொலைக்குப் பிறகு சுமார் நான்கு மணி நேரமாக கான்பூர் நகர் முழுவதும் அலைந்து திரிந்த சச்சின், இறுதியில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில், போலீஸார், வீட்டில் கட்டிலில் கிடந்த ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சத்யஜீத் குப்தா கூறுகையில், “கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சச்சின் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் புகாரின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” எனத் தெரிவித்தார்.
