கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் (42) என்பவர், பேருந்து பயணத்தின் போது பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக், ஜவுளி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வேலை விஷயமாக கண்ணூருக்கு கேரள அரசுப் பேருந்தில் (KSRTC) சென்று கொண்டிருந்தார். அதே பேருந்தில் ஷிம்ஜிதா என்ற பெண்ணும் பயணம் செய்துள்ளார்.
பயணத்தின் போது தீபக் தன்னைத் தவறான முறையில் தொட்டதாகக் கூறி, ஷிம்ஜிதா தனது அலைபேசியில் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில், பேருந்து கூட்டத்தில் தீபக்கின் முழங்கை பெண்ணின் உடலில் உரசுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
உளவியல் ஆலோசகராகப் பணியாற்றும் ஷிம்ஜிதா, “இது தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டு செய்யப்பட்ட பாலியல் அத்துமீறல்” என்று குற்றம் சாட்டினார். தீபக் மற்றொரு பெண்ணிடமும் தவறாக நடக்க முயன்றதை கவனித்த பின்னரே, தான் வீடியோ எடுக்கத் தொடங்கியதாக அவர் விளக்கம் அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார். உண்மை என்னவென்று தெரியாமல் வீடியோக்களைப் பகிர்ந்து ஒருவரது வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்” என அவரது உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
தீபக்கின் மரணம் கேரளாவில் பெரும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. “கூட்டத்தில் தற்செயலாக கை உரசுவதைக் கூட பாலியல் சீண்டலாகச் சித்தரித்து ஒருவரது உயிரைப் பறித்துவிட்டனர்” எனப் பலரும் ஷிம்ஜிதாவை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆண்கள் உரிமை ஆர்வலரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான ராகுல் ஈஸ்வர், “தவறான புகாரால் ஒரு உயிர் பறிபோயுள்ளது. ஷிம்ஜிதா மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்த தீபக்கை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். ஆண்களுக்கு எதிரான பொய் புகார்களைத் தடுக்க ‘ஆண்கள் உரிமை ஆணையம்’ அமைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் 2இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
