மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் அறிமுகமான நபர் ஒருவர், போர்ச்சுகல் நாட்டில் ஆண்டுக்கு ₹18 லட்சம் சம்பளத்தில் பிரம்மாண்ட வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டியுள்ளார்.
வெளிநாட்டில் அதிகச் சம்பளத்தில் வேலை பார்த்துத் தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கலாம் என்ற உயரிய கனவோடு அந்தப் பெண்ணும் அதை உண்மை என நம்பியுள்ளார். ஆனால், அந்தப் போலி விளம்பரத்தின் பின்னணியில் சர்வதேச மனித கடத்தல் கும்பலின் கொடூரச் சதி மறைந்திருந்தது அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
புனேயில் செயல்பட்டு வந்த அந்தப் போலி வேலைவாய்ப்பு நிறுவனம், அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து அந்தப் பெண்ணைப் போர்ச்சுகல் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், அந்நிய தேசத்தில் அவர் காலடி எடுத்து வைத்த அடுத்த கணமே, அவரது கனவுகள் அனைத்தும் நரகமாக மாறின.
அங்கு அவரை வரவேற்ற நபர்கள், அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பறித்துக்கொண்டு, அவரை ஒரு மனித கடத்தல் கும்பலிடம் பெரும் தொகைக்கு விற்றுவிட்டனர். அந்நிய மண்ணில் எவ்வித உதவியும் இன்றிச் சிறைபிடிக்கப்பட்ட அந்தப் பெண், கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
எப்படியோ தனது அசாத்திய துணிச்சலாலும் போராட்டத்தாலும் அந்த அரக்கர்களின் பிடியிலிருந்து தப்பித்து, ஒருவழியாகத் தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்பி வந்து சேர்ந்துள்ளார். இந்தியா வந்தடைந்த அந்தப் பெண், புனே காவல்துறையிடம் தான் சந்தித்த கொடூரங்களை விவரித்துப் புகார் அளித்தபோது, அதைக் கேட்ட காவல் அதிகாரிகளே அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
இன்ஸ்டாகிராம் வழியே வலைவிரித்து, ₹18 லட்சம் பேக்கேஜ் என ஆசைகாட்டிப் பெண்களை வெளிநாட்டுக்குக் கடத்தும் இந்தப் போலி நிறுவனத்தின் பின்னணியில் உள்ள சர்வதேசக் கும்பலைத் தூக்கக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சமூக வலைதளங்கள்ல வர்ற விளம்பரங்களையும், அறிமுகமில்லாத நபர்கள் காட்டுற அதிகச் சம்பள ஆசையையும் தயவுசெஞ்சு குருட்டுத்தனமா நம்பாதீங்கப்பா… ஒரு வேலையில சேருறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை தீர விசாரிச்சுக்கோங்க என நெட்டிசன்கள் பலரும் இந்தச் சம்பவத்தைப் பார்த்து எச்சரிக்கையுடனும் ஆத்திரத்துடனும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
