மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனு, ராஜஸ்தானில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு மூன்று நாட்களாகக் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சோனுவுக்குக் காதல் இருந்துள்ளது.
அந்தப் பெண் அவருடன் போப்பாலுக்கு வந்து தங்கியிருந்த நிலையில், பின்னர் குடும்பத்தினர் சமாதானம் பேசி அவரைத் திரும்ப அழைத்துச் சென்றுள்ளனர்.
சில நாட்களுக்குப் பிறகு, அப்பெண் தன்னை நேரில் வந்து சந்திக்கும்படி சோனுவை அழைத்ததையடுத்து, அவரை நம்பி அங்கு சென்ற சோனுவை அப்பெண்ணின் குடும்பத்தினர் கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது சோனுவை அடித்துத் துன்புறுத்தியது மட்டுமன்றி, பீர் பாட்டிலில் இருந்த சிறுநீரைக் குடிக்க வைத்தும் அந்தக் கும்பல் கொடுமைப்படுத்தியுள்ளது. இந்த வன்கொடுமைகளை வீடியோவாகப் பதிவு செய்து சோனுவின் குடும்பத்தினருக்கும் அனுப்பியுள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போப்பால் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். தற்போது ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச போலீஸார் இணைந்து சோனுவைப் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வீடியோ ஆதாரங்களைக் கொண்டு குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
